×

இலங்கையுடன் டி20 தொடர் இந்திய அணியில் மீண்டும் பூம்ரா, தவான் : ரோகித்துக்கு ஓய்வு

மும்பை : இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் இந்தியா வரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது (ஜன.5 கவுகாத்தி, ஜன.7 இந்தூர், ஜன.10 புனே). இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது (ஜன.14 மும்பை), ஜன.17 ராஜ்கோட், ஜன.19 பெங்களூரு). இந்த 2 தொடர்களுக்குமான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கையுடன் நடக்க உள்ள டி20 தொடருக்கான அணியில் தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அவர் 47 போட்டிகளில் விளையாடி உள்ளார். இது கேப்டன் கோஹ்லியை விட 3 போட்டிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு ரோகித்துக்கு ஓய்வளிக்க தேர்வுக் குழுவினர் முடிவு செய்தனர். வேகப் பதுவீச்சாளர் முகமது ஷமிக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா அணிக்கு திரும்பியுள்ளார். தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் 8 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த பிருத்வி ஷா, நியூசிலாந்து செல்லும் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா டி20 அணி: கோஹ்லி (கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஷிவம் துபே, யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன். இந்தியா ஒருநாள் அணி: கோஹ்லி, தவான், ரோகித், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஷிவம் துபே, ஜடேஜா, குல்தீப், சாஹல், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பூம்ரா.

Tags : Sri Lanka ,Dhawan , Boomra, Dhawan return, T20 series with Sri Lanka
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...